Monday, 12 January 2026

இலக்கிய வகையில் மேல்நாட்டவர் கருத்து

படைப்பாளர் தாமே எல்லா மாந்தர் கூற்றிலும் வெளிப்படுவதை இங்கு நாம் உணர வேண்டும். இவைகளில் நாடகப்பாட்டு, தனிமொழி என்பவை நாடகத்திற்கு உரியவையாகும்.)

தனிச் செய்யுள் என்பது தன்னுணர்ச்சி பாட்டு என்றும் கூறப்படும். கவிஞர் தாம் பாடும் கவிதைகளில் தன் கூற்றாக ஒரு கருத்தைக் கூறும் கவிதை தனிச்செய்யுள் தன்னுணர்ச்சிப் பாட்டு என்பதாகும். 

சங்க நூல்களில் இடம் பெறும் புறப்பாடல் முதல் இன்றைய மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, சென்ரியூகவிதை வரை உள்ள கவிஞர் கூற்றாக அமையும் பாடல்கள் யாவும் தனிச் செய்யுள் எனப்படும். தனிநிலைச் செய்யுளே தன்னுணர்ச்சிப் பாட்டு, சான்றாக.

'நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.  (புறநானூறு)

என்ற புறநானூற்றுப் பாடலையும்

'இனியொன்று கேட்போம் நதிவிற்ற காசில் படகா? மனிதனை மறந்து விட்டு இலக்கியமா?

(தமிழன்பன், என்ளீட்டு எதிரே ஒரு எருக்கஞ்செடி)

என்ற புதுக்கவிதையையும் கூறலாம். இப்பாடல்கள், கவிஞன் நேரடியாக வாசகர்களை விளித்துப் பேசும் குரலாக உள்ளன. இப்பாடல்கள் தனிச்செய்யுள் -தன்னுணர்ச்சிப் பாடல்கள்.

மாந்தர் கூற்றாக அமையும் பாடல்கள் நாடக முறையில் அமைந்த கூற்றுக்கள் (Dramatic monologue) என்று வகைப்படுத்தப்படும். ஒரு பாத்திரத்தின் கூற்றாக நாடகத் தன்மையோடு அமையும் பாடல்களை இவ்வகையில் மேனாட்டுத் திறனாய்வாளர்கள் அடக்குவர். 

முழுமையான நாடகமாக அல்லாமல், குறிப்பிட்ட ஒரு நாடகக் காட்சியை அது கூறுவது போல அமையும், ஒருவர் கூற்றில், ஒரு காட்சியை ஒரு சம்பவச் சூழலை விளக்குவதுபோல அது அமையும்.

 தமிழில் உள்ள சங்க அகப்பாடல்கள் முதல் இன்றைய கவிதைகளில் இடம் பெறும் மாந்தர் கூற்றாக அமையும் பாடல்கள் வரை நாடகக் கூற்றுப் பாடல்கள் காணப் பெறுகின்றன. சான்றாக,

யாரு மில்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே (குறுந்தொகை)

என்ற குறுத்தொகைப் பாடல் தலைவி கூற்றாக உள்ளது. காதல் நாடகம் அதில் காட்டப்படுகிறது. நம்மாழ்வார்திருவாய்மொழிப் பாடல்

'பட்ட போதுஎழு போதறியாள் 'விரை

மட்டலர் தண்துழாய்' என்னும், சுடர்

வட்ட வாய்நுதி நேமியீர் நுமது

இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே   (திருவாய்மொழி)

தாய் கூற்றாக உள்ளது. தன் மகளுக்கு இறைவன் (தலைவன்) செய்த காதல் நோய் நாடகக் காட்சி இதில் உள்ளது. கவிதையைக் கதை தழுவிய பாடல் (நீண்டது) என்ற அளவில் காப்பியம், நாடகம் என்று பகுத்தனர்.

உரைநடையில் அமைந்த இலக்கியங்களைப் புனைகதை (Fiction), புனைகதை அல்லாதவை (non fiction) என்று பகுத்து விளக்கம் கூறினர். புனைகதை என்பதில், சிறுகதை, நாவல், குறுநாவல் என்று வகைப்படுத்தி விளக்கினர். புனைகதை அல்லாதவற்றை, வாழ்க்கை வரலாறு (தன் வரலாறு, பிறர் வரலாறு). 

குழந்தை பயண இலக்கியம் என்று இலக்கியம், நாட் குறிப்பு, கட்டுரை, வகைப்படுத்தியுள்ளனர் அடிப்படையில் கவிதை, காப்பியம், உரைநடை இலக்கியங்கள் என்ற பெரும் வகைப்பாட்டில் அயல் நாட்டர் இலக்கிய வகைகளை வகைப்படுத்தி உள்ளனர் என்று அறிகிறோம்.

இலக்கிய வகையின் பாகுபாடு

மேனாட்டாரின் இலக்கிய வகைப்பாகுபாடு, தொடக்க காலத்தில் பாட்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. பாட்டு இசையோடு கூடியது. தனிப் பாடல், குழுப் பாடல் என்ற முறையில் வாய்மொழி வழக்காக, நீண்ட காலமாக வழங்கி வந்திருக்க வேண்டும். எனவேதான், பாட்டின் அடிப்படையாகப் பிறந்த தன் உணர்ச்சிப் பாட்டு, நாடகக் கதைப் பாட்டு என்று இலக்கிய வகைகளைப் பாகுபாடு செய்தனர்.

அடுத்த நிலையில், நாடகம், காப்பியம் ஆகிய இலக்கிய வகைகளைப் பகுத்தனர். இவை இரண்டும் கதை தழுவிய பாடல்களாகும். தனிப் பாட்டு என்பதிலிருந்து, கதை தழுவிய பாடல் என்ற நிலைக்குக் காப்பிய இலக்கியம் வளர்ந்த நிலையை இது காட்டும். 

நாடகத்திலும் காப்பியத்திலும், கதை மாந்தரின் கூற்றுக்களாக அமைந்த பாடல்கள் இடம் பெறும். மாந்தரின்தனிமொழி என்பவையும் இடம் பெறும். கதை சொல்லும் முறையில், ஆசிரியர் கூற்று என்பதும் இடம் பெறும். இந்த அடிப்படையில் பார்த்தால், தனிச் செய்யுளின் வளர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.

அடுத்த நிலையில் கவிதை இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று இருவகையாகப் பகுத்துள்ளனர். பாட்டு, செய்யுள் என்ற நிலை கவிதைக்குள் அடங்கி இருக்கிறது. புதியதாகத் தோன்றிய உரைநடை வடிவம் நிறைய இலக்கிய வகைகளை உருவாக்கியது. காப்பியம் இருந்த இடத்தில் நாவல் வந்து விட்டது.

நாவல், சிறுகதை, குறுநாவல் போன்ற புனைகதை இலக்கியங்கள் ஒரு வகையாகப் பாகுபாடு செய்யப்பட்டன. புனைகதை அல்லாத (non-fiction) இலக்கியங்கள் என்ற வகையில் வாழ்க்கை வரலாறு, கட்டுரை, குழந்தை இலக்கியம், பயணநூல்,நாட் குறிப்பு, கடிதம், பத்திரிகை எழுத்துக்கள் என்ற அனைத்தையும் வகைப்படுத்தினர். இவை தமக்குள் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டு அமையும்.

இலக்கியங்கள் தோன்றிய பிறகு திறனாய்வாளர்கள், அவற்றை வகைகளாகப் பாகுபாடு செய்தனர். சில அடிப்படைகளில் வகைப்படுத்தும் முறை. இலக்கிய வகை உருவாக்கத்திற்கு உதவியது. 

படித்துச் சுவைக்கவும் திறனாய்வு செய்யவும் இந்த வகைப்பாகுபாடு உதவியது. திறனாய்வைப் பாடமாகப் படிக்கும் நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments


EmoticonEmoticon